இதற்காக ‘மக்கள்’ என்ற பெயரில் ஒரு செயலி உருவாக்கப்பட்டு அனைத்து மக்களின் ஆதார் விவரங்களையும் ஒருங்கிணைக்க முடிவெடுக்கப்பட்டது. இதன்மூலம், மாநில அளவில் குடும்பங்களின் தரவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ், பொது விநியோக திட்டம், முதியோர் ஓய்வூதியம், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வரும் 100 நாள் வேலை, முதல்வரின் பசுமை வீடு, சுகாதாரத் துறையின் மருத்துவக் காப்பீடு, தொழிலாளர் நலத் துறையின் நலவாரிய உதவித் தொகைகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித் தொகை மற்றும் சமூகநலத்துறை, வருவாய், பதிவுத் துறை, பள்ளிக்கல்வித் துறை, கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆகிய துறைகளின் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான பணிகள் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையிடம் ஒப்படைக்கப்பட்டு, அடிப்படை பணிகள் நடந்து வந்தன. இதற்கான அங்கீகாரம் பெற்ற பயனர் முகமையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, ஆதார் அமைப்பிடம் பதிவு செய்தது. தொடர்ந்து, ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்’ (KYC) என்பதன் அடிப்படையில், முகவரி, குடும்ப உறுப்பினரின் பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை பெறுவதற்கான அடிப்படை பணிகளும் தொடங்கப்பட்டன.
‘பிறப்பு முதல் இறப்பு வரை அரசால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சேவைகளையும் விண்ணப்பம் ஏதும் இல்லாமல் தாமாகவே முன்வந்து மக்களுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப, சான்றிதழ்கள், ஆவணங்கள் ஆகியவற்றை வழங்க பயன்படுத்தப்படும் மென்பொருளை தகுந்த முறையில் மாற்றியமைக்க தமிழ்நாடு மின்ஆளுமை முகமை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கும் தனித்துவமான எண் வழங்குவதற்காக ‘குடிமகன் பெட்டகம்’ என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபருக்குரிய அனைத்து ஆவணங்களும் தனித்துவ மக்கள் எண் வாயிலாக மின்னணு முறையில் இந்த பெட்டகத்தை சென்றடையும். அனைவரும் அதில் இருந்து தங்களது சான்றிதழ்கள், ஆவணங்களை பெறலாம்.
அதேபோல, குடிமக்கள் எண்ணை பெற தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்தில் நமது அடிப்படை விவரங்களை பதிவு செய்து, கைபேசிக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல்லை (ஓடிபி) பயன்படுத்தி மக்கள்எண் எனப்படும் ‘மக்கள் ஐ.டி.’யை பெறலாம்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசை பொருத்தவரை, ஐஎப்எச்ஆர்எம்எஸ் எனப்படும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் மூலம், ஆன்லைன் வாயிலாக பயனாளிகளுக்கு அவர்கள் வங்கிக் கணக்குக்கே தொகைகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இது, கருவூலம் மற்றும் கணக்கு துறை வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து திட்ட பயனாளிகளையும் இணைத்து, பயனாளிகள் தங்களுக்கான சேவைகளை பெற ஏற்கெனவே ஆதார் எண்ணை கட்டாயமாக்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் ‘மக்கள் ஐ.டி.’ திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் கோரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அனைத்து வகையான நலத்திட்டங்கள், சான்றிதழ்கள் என அனைத்தும் ஆன்லைன் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் மிக நம்பிக்கையான ஆதார் எண் மூலம் அனைத்து சரிபார்ப்புகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகளை ஒருங்கிணைப்பு என்ற பெயரில் புதிய தளம் துவங்குவதும் ஆதார் எண் போல மக்கள் எண் வழங்குவதும் கூடுதல் பணிச்சுமையே ஆகும்.
இதனால் தமிழக அரசுக்கு வீண் கூடுதல் செலவினம் ஆகும். இந்த பணத்தில் நடைமுறையில் இல்லாத வேறு ஏதேனும் புதிய மக்கள் திட்டங்களை செயல்படுத்தலாம்.
ஆதார் எண் போல மக்கள் எண் தனித்துவமாகவும், நம்பிக்கைக்குரியதாகவும், போலி இல்லாமலும் திகழுமா என்பதை செயல்பாட்டுக்கு வந்த பிறகு தான் தெரிய வரும்.
பனிச்சுமைஅதிகம்தான்
ReplyDelete