கடிவாளம்
குமரனுக்கு ஒரே மகன் வேலன். எனவே, வேலன் கொஞ்சம் செல்லமாகவே வளர்ந்தான். வேலன் எதைக் கேட்டாலும் குமரன் வாங்கிக்கொடுத்து விடுவார். குமரன் மனைவி தேவி ரொம்பவும் செல்லம் கொடுக்காதீர்கள்.
அவன் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்காதீர்கள், அவசியமானதை மட்டும் வாங்கிக்கொடுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் குமரன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேலன் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்து விடுவார். நம் பிள்ளைக்கு கேட்ட பொருள் கிடைக்கவில்லை என்றோ, ஏமாற்ற உணர்வோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் அவன் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்து விடுவேன் என்று விளக்கம் கொடுப்பார் குமரன். அவன் கேட்கும் பொருளை நாம் வாங்கிக் கொடுப்பதால் மற்ற குழந்தைகளின் பொருளைக் கண்டு ஆசையோ, எடுத்துக்கொள்ளும் எண்ணமோ வராது என்றும் எதுவா இருந்தாலும் என் அப்பா வாங்கிக்கொடுத்து விடுவார் என்ற உணர்வும் ஏற்பட்டு விடும். இதனால் நியாயமான, பொறாமைக் குணம் இல்லாத, பற்றற்ற குழந்தையாக வளருவான் என்பது குமரனின் கருத்தாக இருந்தது.
வேலனும் செல்லமாகவே வளர்ந்தான். அவன் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் குமரன். வேலன் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குச் சென்றான். அவன் விரும்பிய அறிவியல் கல்லூரியிலேயே சேர்ந்து படிக்க ஆரம்பித்தான் வேலன். வேலன் தன் தந்தையிடம் ஒரு லேப்டாப்பும்,
ஒரு ஸ்மார்ட் ஃபோனும் கேட்டான். ஓரிரு நாளில் ஒரு லேப்டாப்பும்,
ஒரு ஸ்மார்ட்ஃபோனும் வாங்கி வந்து வேலனிடம் கொடுத்தார் குமரன். வேலன் அதை கையில் வாங்கியதும் அவன் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்து குமரனும் தேவியும் பூரித்துப் போனார்கள்.
லேப்டாப்பையும்,
ஸ்மார்ட் போனையும் கல்லூரிக்கு எடுத்து செல்வதும் வீட்டுக்கு வந்ததும் அவற்றை இயக்குவது தான் அவனது வேலையாக இருந்தது. நாளடைவில் அவற்றையே கதி என ஆனான் வேலன். வெளியில் செல்வது கூட இல்லாமல் எப்போதும் அவற்றையே பயன்படுத்திக் கொண்டிருந்தான் வேலன். இரவு தூங்கும் வரை அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு இருப்பது வாடிக்கையாகப் போனது. அவனைப் பார்த்த குமரனுக்கும் தேவிக்கும் மன வருத்தம் ஆனது. என்னடா நம்ம பிள்ளை எப்ப பார்த்தாலும் செல்போனையும், லேப்டாப்பையுமே நோண்டிக்கொண்டு இருக்கானே என்று. வேலனும் தேவியும் நம் பிள்ளையை எப்படியாவது நல் வழிப்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.
வழக்கம் போல் ஒரு மாலை வேளையில் வேலன் லேப்டாப்பையும்,
செல்போனையும் பயன்படுத்திக் கொண்டிருந்தான் வேலன். குமரன் வேலன் அருகில் வந்து அமர்ந்தார். வேலன் அவரை கவனிக்கவில்லை.
அந்த அளவுக்கு அவன் அவற்றுடன் மூழ்கி இருந்தான். குமரன் மெல்லியக் குரலில் கேட்டார், தம்பி என்னப்பா பன்ற! ஃபேஸ் புக்ல ஃப்ரன்ட்ஸ் கூட சாட் பன்னிக்கிட்டு இருக்கேன் ப்பா என்றான் வேலன். செல்போன், லேப்டாப் ரெண்டையும் ஏன்ப்பா யூஸ் பன்ற!என்று கேட்டார் குமரன். அப்பா, செல்போன்ல மொபைல் ஹாட்ஸ்பாட் ஆன் பன்னிடுவேன். லேப்டாப்ல வைஃபை ஆன் பன்னி, நெட் கனெக்ட் பன்னிடுவேன். இப்ப லேப்டாப்புக்கு நெட் கிடைச்சிடும்.
அதுக்கப்புறம் லேப்டாப்ல ஒர்க் பன்னுவேன் ப்பா, என்றான் வேலன். குமரனுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் ஓஹோ அப்படியா ப்பா என்றார் குமரன்.
குமரன் அடுத்து பேச ஆரம்பித்தார்.
தம்பி ஒன்னும் இல்லப்பா, எதிர்த்த வீட்டு தாத்தா ஆதார் அட்டை தொலைச்சிட்டாராம் ப்பா. பென்சனுக்கு பேங்க்ல கேட்கிறாங்கலாம் ப்பா. நெட் சென்டர்ல போய் சொன்னா எடுத்து கொடுப்பாங்களாம்னு சொன்னாங்களாம் ப்பா. நீ கொஞ்சம் எடுத்துக்கொடுப்பா, பாவம் ப்பா. அப்பா அதெல்லாம் எனக்குத் தெரியாது ப்பா. தம்பி அப்படிலாம் சொல்லக் கூடாதுப்பா. பாவம் ப்பா. வயசானவர் கொஞ்சம் செஞ்சிக் கொடுப் பா என்றார் குமரன். சரிப்பா யூ டுயூப்ல போய் கத்துக்கிட்டு வரேன். என்றான் வேலன். அப்பா ஆதார் அட்டை டவுன்லோட் பன்ன கத்துக்கிட்டேன் ப்பா. அந்த தாத்தா வை மொபைல் போன் எடுத்துக்கிட்டு வர சொல்லுப்பா. என்றான் வேலன். ஏன்ப்பா என்று கேட்டார் குமரன். அந்த மொபைல் நம்பருக்கு ஓடிபி னு ஒரு நம்பர் வரும் ப்பா. அதைக் கொடுத்தால் தான் ஆதார் அட்டை டவுன்லோட் ஆகும் ப்பா என்றான் வேலன். சிறிது நேரத்தில் அந்த தாத்தாவை அழைத்து வந்தார் குமரன். அவரிடம் ஆதார் அட்டையின் ஜெராக்ஸை வாங்கி அந்த ஆதார் நம்பரை உள்ளீடு செய்து, ஓடிபி வரவழைத்து ஆதார் அட்டையை டவுன்லோட் பன்னினான் வேலன். அதை செய்தது வேலனுக்கும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றது போல் இருந்தது. குமரனுக்கும் அந்த தாத்தாவுக்கும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அப்பா ஒரு பிரின்டர் வாங்கிடுவோம் ப்பா. இது போல் யாராவது கேட்டால் செஞ்சிக்கொடுப்போம் ப்பா என்றான் வேலன். வேலனின் இந்த வார்த்தையை கேட்ட குமரனுக்கு பூரிப்பாய் இருந்தது. அடுத்த நாளே ஒரு பிரின்டர் வாங்கி வந்தார் குமரன். உடனே முதல் பிரின்ட்டாக ஆதார் அட்டையை எடுத்துக் கொடுத்தான் வேலன். அதைக் கொண்டு போய் அந்த தாத்தாவிடம் கொடுக்க சென்ற குமரன் தாத்தாவுடன் திரும்பி வந்தார். அந்த தாத்தா வேலனின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு ஒரு வித தழதழுத்தக் குரலுடன் சொன்னார், ரொம்ப நன்றி தம்பி. வேலனுக்கு கண் லேசாக கலங்கியது. தாத்தாவுக்கு உதவினோமே என்ற பெருமையாகவும் இருந்தது.
ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய கற்றுக் கொள்ள எடுத்த முயற்சியிலும்,
அதில் வெற்றிக் கண்ட முடிவிலும் கிடைத்த உணர்வு வேலனுக்கு ஒரு சாதனை செய்தது போல் தெரிந்தது. நண்பர்களுடன் சாட் செய்த போது கிடைத்த மகிழ்ச்சியை விட இந்த வெற்றியில் கிடைத்த உணர்வு வேலனுக்குப் பெரிதாக தெரிந்தது. அதனுடன் வயதான அந்த தாத்தாவின் ஆனந்தக்கண்ணீரில் கூறிய நன்றி அவனுக்கு இது போல் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தழைத்தோங்க செய்தது.
மற்றொரு நாள் குமரன் சொன்னார், தம்பி நம்ம பக்கத்து வீட்டுக்கார அக்காவை கல்யாணம் பன்னி கொடுத்திட்டாங்கல.
அதனால அவங்க ரேசன் கார்டுல இருந்து அவங்க பேரை நீக்கி கொடுப்பா என்றார். இந்த முறை வேலன் சொன்னான், சரி ப்பா. நான் கத்துக்கிட்டு செஞ்சித் தரேன் என்றான். அதே போல் பெயர் நீக்கி சான்றிதழ் பிரின்ட் செய்து கொடுத்தான் வேலன். வேலனை இதே போல் அக்கம் பக்கம் உள்ளோரின் தேவைகளான ரேசன் கார்டில் பெயர் சேர்த்தல், புதிய ரேசன் கார்டு அப்ளை செய்தல், பான் கார்டு அப்ளை செய்தல் போன்ற ஆன்லைன் வேலைகளை செய்ய்ய வைத்தார் குமரன். அவர்கள் மனமுவந்து நன்றி கூறுவதும், அவர்கள் தரும் சிறு அன்பளிப்பும் அவனுக்குப் பெரிய மதிப்புமிக்கவையாக இருந்தது. இப்போதெல்லாம் வேலன் மற்றவர்களுக்கு உதவுவதற்கு மட்டும் தான் லேப்டாப்பை அதிக அளவு பயன்படுத்தினான்.
மற்றவைகளுக்கெல்லாம் அவன் அதிக நேரம் செலவழிப்பதில்லை.
இதைக் கண்ட குமரனுக்கும் தேவிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
லேப்டாப்போ, ஸ்மார்ட்ஃபோனோ எந்த ஒரு அறிவியல் சாதனமாக இருந்தாலும் சரி அவற்றை அதிகமாக கேளிக்கைகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று கவலைப்படாதீர்கள்.
அந்த சாதனங்களில் உள்ள ஆக்கப்பூர்வமானவற்றை அதிகம் செய்யும்படி கடிவாளம் மட்டும் போட்டு விடுங்கள் போதும். ஆக்கப்பூர்வமான செயல்களால் ஏற்படும் மதிப்பு, நன்றியுணர்வு,
மனநிறைவு, மகிழ்ச்சி போன்றவை தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்ககளில் மட்டுமே அதிக அளவில் ஈடுபட மனம் விரும்பிவிடும்.
No comments:
Post a Comment