Inaiya Sevaigal: மரகதப் பூ - சிறுகதை

மரகதப் பூ - சிறுகதை




மரகதப் பூ
வித்தகச்சாரியார் என்ற ஒரு குருதேவர் இருந்தார். அவர் பல கலைகளை கற்றவர். எனவே அவரது குருகுலத்தில் மிக அதிக அளவு மாணவர்கள் தங்கி வித்தைகளை கற்று வந்தனர். அவரது குருகுலத்தில் சீனு என்ற சுறுசுறுப்பான கெட்டிக்கார மாணவன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் திறமைசாலி என்பதால் குருவுக்கு அவனை மிகவும் பிடிக்கும். குரு எந்த விஷயத்தை சொன்னாலும் சீனு மிகவும் உன்னிப்பாக கவனமுடன் கேட்டு வருவான். ஒரு நாள் குருதேவர் அனைவரையும் அழைத்து ஒரு அதிசியம் சொல்ல  போகிறேன் என்றார். அதிசியம் என்றவுடன் மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வமுடன் குருவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டனர். சீனுவும் குருவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். குரு சொல்ல ஆரம்பித்தார்.
            நம் ஆசிரமத்திற்கு கிழக்குப் பகுதியில் ஒரு ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் அடுத்தக்கரையில் சுந்தரவனம் என்ற காடு உள்ளது. அந்த காடு மிகவும் அதிசயமான ஒன்றாகும் என்றார். இதனை கேட்ட மாணவர்கள் குருவிடம் ஆச்சர்யத்துடன் கேட்டனர். என்ன குரு சொல்றீங்க காட்டில் என்ன ஆச்சர்யம் வந்திடப் போகுது. அதற்கு குரு சொன்னார். ஆமாம் மாணவர்களே அந்தக் காடு ஆச்சர்யமான காடு தான். ஏனெனில் அந்தக் காட்டில் உள்ள விலங்குகள் பேசும் திறன் உடையவை. உடனே மாணவர்கள் சொன்னார்கள் போங்க குருவே நீங்க விளையாட்டுக்கு சொல்றீங்க. உடனே குரு சொன்னார், இல்லை குழந்தைகளே நான் உண்மையாகத்தான் சொல்கிறேன். அதனால் தான் அந்தக் காடு அதிசியக்காடு என்றேன். குரு மேலும் சொல்ல ஆரம்பித்தார், அதுமட்டுமில்லை மாணவர்களே அங்கு ஒரு அதிசயப் பூ உள்ளது. அதன் பெயர் மரகதப் பூ. அது எப்பவும் வாடாமல் அப்படியே இருக்கும் என்றார். உடனே மாணவர்கள் கேட்டனர். மரகதப் பூ வா? அதிசியப் பூ வா? என்ன குரு சொல்றீங்க. என்று ஆச்சர்யத்துடன் கேட்டனர். உடனே குரு சொன்னார்.  ஆமாம் மாணவர்களே அது அதிசயப் பூ தான். ஏனென்றால் அந்தப் பூவை கையில் வைத்துக்கொண்டு நாம் என்ன வேண்டுகிறோமோ? அது அப்படியே நடக்கும் என்றார். அந்தப் பூ மனிதருக்கு மட்டும் தான் அருளும் என்றும் கூறி வியப்பூட்டினார் குரு. இதை கேட்ட மாணவர்கள் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குரலில் கேட்டனர். குருவே அந்தப் பூவை நாம் பறிக்க முடியுமா? என்று. அதற்கு குரு சொன்னார் நிச்சயம் பறிக்க முடியும். ஆனால் அதை தேடிப் பறிப்பது தான் கஷ்டம் என்றார். மாணவர்கள் கேட்டனர். எப்படி குருவே கஷ்டம் என்கிறீர்கள் என்றனர். அதற்கு குரு, அங்கு கொடிய விலங்குகள் இருக்கும் என்றார். சரி குருவே அந்தப் பூவை எப்படி கண்டுபிடிப்பது என்று மாணவர்கள் கேட்டனர். அதற்கு குரு சொன்னார், அந்தப் பூ தங்க நிறத்தில் இருக்கும். இனிய மணமாக இருக்கும். வாடாமல் இருக்கும். எந்த ஜந்துக்களும் அப்பூவை தொடாமல் இருக்கும். இவற்றை வைத்து தான் நாம் அப்பூவை கண்டுபிடிக்க முடியும் என்றார் குரு. இன்றைய வகுப்பு இத்துடன் முடிந்து விட்டது. அனைவரும் உணவருந்தி விட்டு உறங்க செல்லுங்கள் என்று கூறினார் குரு. அனைவரும் உணவருந்த சென்று விட்டனர்.
            அடுத்த நாள் காலை வழிபாடு தொடங்கியது. அனைத்து மாணவர்களும் ஆஜராயினர். ஆனால் சீனு மட்டும் வரவில்லை. மாணவர்கள் குரு விடம் சொன்னனர். குருவே, சீனுவை காணவில்லை என்று. உடனே குருவே சிரித்துக் கொண்டே சொன்னார். எனக்கு தெரியும் அவன் காணாமல் போவான் என்று. அனைத்து மாணவர்களும் குருவை வியப்புடன் பார்த்தனர். குரு மேலும் சொன்னார், அவன் வரும் போது வரட்டும். நாம் நம் பணிகளை தொடர்வோம் என்று. அவர்களது பணியை தொடர ஆரம்பித்தனர். குரு மனதில் நினைத்துக்கொண்டார். சீனு நிச்சயம் மரகதப்பூவுடன் தான் இங்கு வருவான் என்று.
            ஆம் குரு நினைத்தது உண்மை தான். சீனு அந்த மரகதப்பூவைத் தேடி சுந்தரவனத்திற்கு சென்றுகொண்டிருந்தான். குரு சொன்னதை விட அந்த ஆறு மிகப்பெரியதாய் இருந்தது. மிகவும் வேகமாக ஆற்றுநீர் சென்றுகொண்டிருப்பதால் ஆற்றின் வேகத்தை எதிர்த்து தான் நீந்தி செல்ல வேண்டும். சீனுவின் ஆர்வத்திற்கு முன் அந்த ஆற்றின் வேகம் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. ஆம், சீனு மிக எளிதில் ஆற்றை நீந்திக் கடந்து சுந்தரவனத்திற்குள் நுழைந்தான். மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. காட்டின் உள்ளே சீனு நுழைய ஆரம்பித்தான். சிறிது தூரம் நடப்பதற்குள் யாராவது காப்பாற்றுங்களேன். யாராவது காப்பாற்றுங்களேன் என்ற குரல் கேட்டது. சீனுவிற்கு என்ன இது இந்தக் காட்டுக்குள் மனிதர் குரல் கேட்கிறதே என்று ஆச்சர்யம் ஏற்பட்டது. யாராக இருப்பினும் உடனே அவரைக் காப்பாற்ற வேண்டும் என சீனு முடிவெடுத்தான். அந்தக் குரல் வரும் திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் சீனு. குரல் வந்த இடத்தை நெருங்கியதும் சீனு ஆச்சர்யத்தில் திழைத்தான். ஏனென்றால் அவன் எதிரில் தென்பட்டது ஒரு அழகிய பஞ்சவர்ணக்கிளி. நீ தான் கத்தியதா? என்று ஆச்சயர்யத்துடன் கேட்டான். ஆம் தம்பி. என்றது பஞ்சவர்ணக்கிளி. சீனு ஆச்சர்யத்துடன் கேட்டான். உன்னால் பேச முடியமா? என்று. அதற்கு அந்த பஞ்சவர்ணக்கிளி சொன்னது. இந்தக் காட்டில் எல்லோருமே பேசுவார்கள் என்றது. குரு சொன்னது உண்மைதான் என புரிந்து கொண்டான் சீனு. ஏன் உனக்கு என்ன ஆயிற்று என்று கேட்டான் சீனு. எனது இறக்கையில் ஒரு முள் மாட்டியுள்ளது. இதனால் என்னால் பறக்க முடியவில்லை. வலியும் தாங்க முடியவில்லை. என்றது அந்தக் கிளி. சீனு அந்தக் கிளியின் இறக்கையில் உள்ள முள்ளை கவனமுடன் எடுத்து விட்டான். முள்ளால் கிளியின் உடம்பில் ஏற்பட்ட காயத்திற்கும் தேடிப்பிடித்து பச்சிலை சாற்றை பிழிந்து விட்டான். இதனால் அந்த பஞ்சவர்ணக்கிளி உடல்நலம் தேறி, உனக்கு ரொம்ப நன்றி தம்பி என்றது. சரி தம்பி நீ யார்? உன் பெயர் என்ன? நீ எதற்கு இங்கு வந்தாய்? என கேள்விகளை அடுக்கியது அந்தக் கிளி. என் பெயர் சீனு. நான் வித்தகச்சாரியார் குருவின் மாணவன். என் குரு இந்தக் காட்டில் மரகதப்பூ என்ற அதிசயப் பூ இருப்பதாகச் சொன்னார். அதைப் பறிக்கவே நான் இங்கு வந்தேன் என்றான் சீனு. இதைக் கேட்ட பஞ்சவர்ணக்கிளி இங்கு நிறைய பூ உள்ளது சீனு. ஆனால் மரகதப்பூவை எப்படி கண்டுபிடிப்பாய் என்று கேட்டது அந்தக் கிளி. அந்தப் பூவின் பண்புகளை விவரித்தான் சீனு. உடனே பஞ்சவர்ணக்கிளி சொன்னது. சரி என்னால் முடிந்த வரை உனக்கு உதவுகிறேன் என்று. சீனுவும் நன்றியுடன் புன்னகைத்தான்.
            சீனு சொன்னான். கிளியே, நான் நெடுந்தொலைவிலிருந்து வந்துள்ளதால் எனக்கு மிகவும் பசிக்கிறது என்று. உடனே கிளி சொன்னது என்னுடன் வா இன்னும் கொஞ்சம் தூரத்தில் பழத்தோட்டம் உள்ளது என்று. இருவரும் பழத்தோட்டத்திற்கு செல்ல ஆரம்பித்தனர். ஆப்பிள், மாம்பழம், கொய்யா, வாழைப்பழம், திராட்சை, அன்னாசிப்பழம், பலாப்பழம், மாதுளை என எல்லாப் பழமும் அங்கு இருந்தது. அதைப் பார்த்த சீனு ஆஹா, என்ன அழகான தோட்டம். எல்லா பழமும் இருக்கிறதே. இது காடு இல்லை. நந்தவனம் போல் இருக்கிறது என்றான் சீனு. பஞ்சவர்ணக்கிளி சரி போய் சாப்பிடலாம் வா என்றது. அங்கு கரடியும் நரியும் சண்டை போட்டுக்கொண்டு இருந்தன. அதைப் பார்த்த பஞ்சவர்ணக்கிளி ஏன் சண்டைப் போட்டுக்கொள்கிறீர்கள் என கேட்டது. அதற்கு நரி சொன்னது. கீழே கொஞ்சம் தான் பழங்கள் உள்ளன. மேலே தான் நிறைய பழங்கள் உள்ளன. அதனால் கீழே உள்ள பழங்களை நான் தின்றுகொள்கிறேன். கரடிக்கு மரத்தில் ஏறுவது எளிது என்பதால் மேலே உள்ள பழங்களை கரடியை சாப்பிடச் சொன்னேன். கரடியோ கீழே உள்ளதைத் தான் நான் சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்கிறது என்றது. உடனே கரடி சொன்னது மேலே காய்களும் பழங்களும் சேர்ந்து தான் இருக்கும். கீழே பழங்கள் மட்டுமே உள்ளது. அதனால் எளிதாக சாப்பிடலாம். எனக்கும் பசி அதிகமாக இருக்கிறது. இதில் நான் எவ்வாறு மரத்தில் ஏறி தேடி சாப்பிட முடியும் என்றது கரடி. கவலைப் படாதீர்கள் நீங்கள் இருவரும் கீழே அமருங்கள் நான் பழங்களாக பார்த்து பறித்து வருகிறேன் என்றான் சீனு. இதைக்கேட்ட நரியும், கரடியும் பதில் சொல்லாமல் அப்படியே நின்று கொண்டிருந்தின. உடனே பஞ்சவர்ணக்கிளி சொன்னது. ஆம் நண்பர்களே, இவன் பெயர் சீனு. இவன் மிகவும் நல்லவன் என்றும் அவனது பயண விவரத்தையும் எடுத்துக் கூறியது. அதற்கு நரியும், கரடியும் மனிதர்கள் நமக்கு எதிரானவர்கள் தானே என்றன. அதற்கு பஞ்சவர்ணக்கிளி சொன்னது ஆனால் இவன் அப்படியில்லை என்றது. அரை மனதுடன் நரியும் கரடியும் கீழே அமர்ந்தன. சீனு பஞ்சவர்ணக்கிளியிடம் சொன்னான். நீ சிறிய பழங்களை பறி. நான் பெரிய பழங்களை பறிக்கிறேன் என்று. சீனு மரத்தின் கீழே மேலே உள்ள பழங்களை மிக நேர்த்தியாக பறித்து சேகரித்தான். பஞ்சவர்ணக்கிளியும் முடிந்தவரை பறந்து பழங்களை பறித்தது. எல்லா பழங்களையும் அனைவரும் பங்கிட்டு பசியாற உண்டனர். கரடியும், நரியும் சீனுவுக்கு நன்றி கூறி விடைபெற்றன.
            சீனு சொன்னான். கிளியே நீ தான் எனக்கு உதவ வேண்டும் என்றான். கிளியும் நிச்சயம் நான் உதவுகிறேன் என்றது. சீனு மேலும் சொன்னான். நான் சொன்ன பண்புகளை உடைய பூ இந்தக்  காட்டில் எங்கு உள்ளது என காடு முழுவதும் பறந்து சென்றால் எளிதில் கண்டுபிடித்து விடலாம். நீ கண்டுபிடித்து வந்து எனக்கு சொல் என்று தயவுடன் கேட்டேன் சீனு. அந்தக் கிளியும் நான் கண்டுபிடித்து வருகிறேன் என்று சொல்லி பறந்து சென்றது. சீனுவும் பூ வைத் தேடி பயணத்தை தொடர்ந்தான்.
            சிறிது தூரம் சென்றவுடன் ஒரு புலி அவன் எதிரில் வந்தது. சீனு அதிர்ந்து போனான். புலி கேட்டது. உனக்கு என்னடா இங்கு வேலை? சீனு புலியிடம் எதையும் விவரிக்க விரும்பவில்லை. விர்ரென ஓடிப்போய் ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான். புலி உறுமிக் கொண்டு சொன்னது. உன்னை என்ன செய்கிறேன் பார். இன்று நீ தான் எனக்கு சாப்பாடு என்றது. இதைக் கேட்ட சீனு வாய்திறக்க முடியாமல் படபடப்புடன் மரக்கிளையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். புலி சொன்னது நீ கீழே வந்து தானே ஆக வேண்டும். நீ கீழே வா உன்னை கடித்து தின்னுவிடுகிறேன் என மிரட்டியது. சிறிது நேரத்தில் சூறைக்காற்று வீசத் தொடங்கியது. சீனு கை வழுக்கி விடக்கூடாது என இறைவனை வேண்டிக்கொண்டு மரத்தை இறுக்கி பிடித்துக்கொண்டான். புலி அவன் இருந்த மரத்துக்கு கீழே படுத்துகொண்டது. புலிக்கு நேராக இருந்த பெரிய கிளை ஒன்று முறியும் தருவாயில் இருந்ததை சீனு பார்த்துவிட்டான். நிலைமையை உணர்ந்த சீனு எது நடந்தாலும் நடக்கட்டும் என நினைத்து அருகில் இருக்கும் மரத்துக்கு தாவினான். இதைப் பார்த்த புலி என்னிடம் இருந்தா தப்பிக்க பார்க்கிறாய் என புலியும் அருகில் இருந்த மரத்தின் கீழ் பாய்ந்தது. புலி பாய்ந்த அடுத்த நொடிப் பொழுதில் மிகப்பெரிய கிளை ஒன்று அது முன்பு படுத்திருந்த இடத்தில் தொப் என்று விழுந்தது. புலி அதிர்ந்து போனது. இன்னும் ஒரு நொடி அங்கேயே இருந்திருந்தால் நாம் இறந்திருப்போம் என உணர்ந்தது. அமைதியில் வீழ்ந்தது புலி. சீனு மெல்ல பேச ஆரம்பித்தான். புலி அண்ணா. அந்தக் கிளை உங்கள் மேல் விழப்போகிறது என்பதை உணர்ந்து தான் நான் பக்கத்துக்கு மரத்துக்கு தாவினேன். அப்போது தான் நீங்கள் அந்த இடத்திலிருந்து நகர்வீர்கள் என நம்பினேன். நீங்களும் அவ்வாறு வந்தவிட்டீர்கள் என மகிழ்ச்சியுடன் கூறினான் சீனு. உடனே புலி சொன்னது. என்னை மன்னித்து விடு தம்பி. மிக்க நன்றி உனக்கு. நான் வருகிறேன் என்று கூறி சென்றது புலி. காற்றும் நின்றது. சீனு தனது பயணத்தை தொடர ஆரம்பித்தான்.
            சிறிது தூரம் சென்றவுடன் யானை பிளிறும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட திசையை நோக்கி நகர்ந்தான் சீனு. அங்கு போய் பார்த்தால் ஒரு யானை குட்டி ஒரு பள்ளத்தில் மாட்டிக்கொண்டிருந்தது. தனது தாயை அழைக்கும் வண்ணம் பிளிறிக் கொண்டிருந்தது. சீனு அந்த குட்டி யாணையிடம் சொன்னான். கவலைப்படாதே நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். என்றான். நீ மனிதன் ஆயிற்றே? நீ எப்படி என்னை காப்பாற்றுவாய் என கேட்டது குட்டி யானை. அதை அப்புறம் பேசிக்கொள்வோம். முதலில் உன்னை காப்பாற்றுகிறேன் என்றான் சீனு. சந்தேகத்துடன் ஒப்புக்கொண்டது குட்டி யானை. நீ ஒரு பக்கமா நின்று கொள் என்று கூறிவிட்டு, அந்த குழியின் மறு பக்கத்தில் மரக்கிளைகளை அள்ளிக் கொட்டினான் சீனு. மரக்கிளைகளை மிதித்து மேடாக செய்யுமாறு குட்டி யானையை பணித்தான் சீனு. குட்டி யானையும் அவ்வாறே செய்தது. இவ்வாறு இருவரும் தொடர்ந்து செய்தனர். ஒரு கட்டத்தில் அந்தக்குழி நிரம்ப ஆரம்பித்தது. குட்டி யானை எளிதாக வெளியே வந்தது. குட்டி யானை சீனுவுக்கு நன்றி கூறியது. என் தாயிடம் உன்னை அழைத்து செல்கிறேன் என்றது குட்டி யானை. சீனுவும் ஒப்புக் கொண்டான். சீனுவை தன் மேல் அமர வைத்துக்கொண்டு தன் தாயிடம் அழைத்து சென்றது குட்டி யானை. சீனுவை பார்த்து பிளறிய தாய் யானையிடம் குட்டி யானை விவரமாக எல்லாவற்றையும் எடுத்துக்கூறியது. சீனுவும் தன் பயண விவரத்தை தாய் யானையிடம் கூறினான். உடனே தாய் யானை எங்களால் முடிந்த உதவியை நாங்களும் செய்கிறோம் என்று கூறி தும்பிக்கையால் ஆசீர்வாதம் செய்து அனுப்பியது.
            சீனு தனது பயணத்தை தொடர ஆரம்பி்த்தான். சீனுவுக்கு மிகுந்த களைப்பாயிற்று ஏதேனும் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுக்க முடிவு செய்தான். அவனருகில் மரவள்ளிக்கிழங்கு தோட்டம் இருப்பதைப் பார்த்தான். பசியாற மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டான். தூக்கம் அவனை அறியாமல் வந்தது. கண்ணெதிரே ஒரு அழகான குகை ஒன்று இருந்தது. ஆஹா என்ன அழகான குகை. இது தான் பாதுகாப்பான இடம். இந்த இடத்திற்கு எந்த விலங்கும் வராது போல தெரிகிறது. நாம் இங்கேயே ஓய்வெடுப்போம் என முடிவு செய்தான் சீனு. இலை தழைகளை பறித்து தலைக்கு வைத்துக்கொண்டு முரட்டுத்தனமாக தூங்கினான் சீனு. பொழுது புலர்ந்தது. தூக்கம் களைந்து விழித்தான் சீனு. அவனெதிரே சிங்கம் அமர்ந்திருப்பதைப் பார்த்து கதிகலங்கி போனான். சிங்கம் கேட்டது. யார் நீ? எதற்கு இங்கு வந்தாய்? நீ அயர்ந்து தூங்கியதால்  உன்னை விட்டு வைத்தேன்? இந்தக் காட்டின் ராஜா வின் குகையிலேயே வந்து தூங்க உனக்கு எவ்வளவு தைரியம் என அடுக்கடுக்காய் கேள்விகளால் துளைத்தது சிங்கம். அரசே என்னை மன்னியுங்கள். என் பெயர் சீனு. நான் அருகில் இருக்கும் வித்தகச்சாரியார் குருகுலத்தில் இருக்கிறேன். நான் மரகதப்பூவை தேடி வந்துள்ளேன். என விளக்கினான் சீனு. அதெல்லாம் சரி, நீ மனிதன் ஆச்சே. மனிதர்கள் எப்போதும் எங்களுக்கும், காட்டிற்கும் விரோதிகள் ஆயிற்றே. எங்களை நீங்கள் அழிக்க நினைப்பவர்கள் ஆச்சே. என்றது சிங்கம். பூவைத் தேடுவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை மன்னா என்று கூறினான் சீனு. காட்டில் உள்ள எல்லா விலங்குகளையும் அழைத்தது சிங்கம். எல்லா விலங்குகளும் சிங்கத்தின் முன் வந்து நின்றன. நடந்ததையெல்லாம் சிங்கம் எல்லோரிடமும் கூறியது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டது சிங்கம். உடனே, கரடி, நரி, யானை, புலி என எல்லா விலங்குகளும் ஒரே நேரத்தில் சொன்னன. மன்னா இந்தச் சிறுவன் மிகவும் நல்லவன். இவன் எங்களுக்கு உதவி தான் செய்துள்ளான் என்று கூறி தங்களுக்கு நடந்த சம்பவங்களை சிங்கத்திடம் எடுத்துக்கூறின. சிங்கம் சீனுவின் நற்குணத்தை உணர்ந்தது. சரி  சீனு நீ மிகவும் நல்லவன் என்பதை நானும் உணர்கிறேன். எங்கள் இனத்திற்கு உதவியதற்கு உனக்கு நன்றி. உனக்கு நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம் என்றது சீனு. சிறிது நேரத்தில் பஞ்சவர்ணக்கிளியும் அங்கு வந்து சேர்ந்தது. சீனு அங்கு நிற்பதைப் பார்த்து அஞ்சியது. சீனுவை காப்பாற்ற வேண்டும் என நினைத்தது. மன்னரை வணங்கி நின்றது. சொல் பஞ்சவர்ணக்கிளி என்றது சிங்கம். மன்னா இந்த சிறுவன் மிகவும் நல்லவன் என்றது. தெரியும் கிளியே எல்லாவற்றையும் விசாரித்துவிட்டேன். கிளி நன்றி மன்னா என்று கூறி தன்னை சீனு காப்பாற்றிய சம்பவத்தையும் மன்னரிடம் எடுத்துக் கூறியது. உடனே சிங்கம் சொன்னது. ஆஹா இந்த சிறிய வயதில் என்ன ஒரு உதவும் குணம் என பாராட்டியது. இனி நீ எங்கள் விருந்தாளி. உனக்கு நாங்கள் உதவுகிறோம் என்றது சிங்கம். உடனே பஞ்சவர்ணக்கிளி அந்தப் பூ இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டேன் என்றது. உடனே சிங்கம், ஆஹா என்ன ஒரு திறமை உனக்கு என பாராட்டியது. புலியாரே சீனுவிற்கு நீங்கள் உதவுங்கள் என ஆணையிட்டது சிங்கம். சீனுவை முதுகில் அமர வைத்துக்கொண்டு புலி புறப்பட்டது அவர்களுக்கு பஞ்சவர்ணக்கிளி வழிகாட்டியது. அனைவரும் மரகதப்பூவைப் பார்த்தனர். பொன்னிறத்தில் தக தக என  மின்னியது, மனம் விரும்பும் மணம் வீசியது மரகதப் பூ. எல்லாம் சரி ஆனால் இது வாடாமல் இருந்தால் தானே இது மரகதப்பூ என்றான் சீனு. உடனே பஞ்சவர்ணக்கிளி சொன்னது. நான் இதைப் பார்த்ததில் இருந்தே இப்படித்தான் இருக்கிறது. எந்த வாட்டமும் இல்லை, எந்த மாற்றமும் இல்லை என்றது. சீனு மிகுந்த சந்தோசத்துடன் அந்த மரகதப்பூவைப் பறித்தான். அனைவரும் சிங்கத்திடம் வந்தனர். சிங்கம் அனைவரையும் பாராட்டியது. மேலும் சொன்னது சீனு நமது விருந்தாளி. அவனுக்கு நாம் விருந்தளித்து அனுப்பி வைக்க வேண்டும் என்றது. எல்லோரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். எல்லோரும் வயிறாற சாப்பிட்டனர். எல்லோரும் சீனுவை மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தனர்.
            மரகதப்பூவை எடுத்துக்கொண்டு குருகுலம் நோக்கி பயணித்தான் சீனு. குருகுலத்தை அடைந்து குருவை வணங்கினான் சீனு. சீனுவின் கையில் மரகதப்பூ இருப்பதைப் பார்த்து அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியுடனும், ஆச்சர்யத்துடனும் பேசிக்கொண்டனர். நீ இந்தப் பூடன் தான் வருவாய் என எனக்கு முன்பே தெரியும் என்றார் குரு. குருவும் மாணவர்களும் சீனுவை பாராட்டினார்கள். இந்த மரகதப் பூவிடம் என்னக் கேட்டாய் என்று கேட்டார் குரு. நான் எதுவும் கேட்கவில்லை பறித்து நேரடியாக உங்களிடம் தான் கொண்டு வந்தேன் என்றான் சீனு. என்ன ஒரு பெருந்தன்மை, என்ன ஒரு பற்றற்ற பண்பு என வியந்து பாராட்டினார் குரு. நீ தான் சிறந்த மாணவன் என்பதை மீண்டும் நிருபித்துவிட்டாய் என பாராட்டினார் குரு. சீனு சொன்னான் குருவே, இந்தப் பூவை தங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்களே எதையாவது கேளுங்கள் என்றான். அகம் மகிழ்ந்து சீனுவை அணைத்துக் கொண்டார் குரு. அந்த மரகதப்பூவை வாங்கி கையில் வைத்துக்கொண்டு குரு கேட்டார், உலகத்தில் உள்ள எல்லா மக்களும் எல்லா வளங்களையும் பெற்று சீருடனும் சிறப்புடனும் வாழ வேண்டும் என்றார். உடனே மரகதப்பூ அவ்வாறே ஆகட்டும் என்றது. குருவும் சீடர்களும் மரகதப்பூவை பூஜை அறையில் வைத்துவிட்டு தங்களது பணிகளை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தனர்.

No comments:

Post a Comment