Inaiya Sevaigal: தூண்டுகோல் - சிறுகதை

தூண்டுகோல் - சிறுகதை



தூண்டுகோல்

சந்திரன் ஒரு கல்லூரிப் பேராசிரியர். தனது பணிநிமித்தமாக நகரத்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிராமத்துக்கு தனது குடும்பத்தினருடன் வந்து செல்வது வழக்கமாக கொண்டிருந்தார். அன்று அவர் ஊருக்கு வரும் போது ஒன்றைக் கவனித்தார். அது என்னவென்றால் ஊரின் தொடக்கத்தில் உள்ள ஒரு ஆலமரத்தின் கீழ் ஐந்து இளைஞர்கள் அமர்ந்து பேசி மகிழ்ந்து கொண்டு இருந்தனர். அவர்களைப் பார்த்து சந்திரனும் இவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளனரே என ஆனந்தப்பட்டார். அவர் அடுத்தடுத்த முறை ஊருக்கு வரும்போதெல்லாம், அந்த இளைஞர்கள் அந்த ஆலமரத்தின் கீழ் பேசி மகிழ்ந்து கொண்டே இருந்தனர். இம்முறை அவருக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. கடுமையாக உழைத்து தன்னையும், தன் குடும்பத்தையும், தன் நாட்டையும் முன்னேற்ற வேண்டிய இந்த வயதில் இப்படி பேசி மகிழ்ந்து காலத்தை வீணடித்துக் கொண்டு இருக்கினரே என வருந்தினார். அவர்களிடம் போய் அவர்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் எடுத்துக்கூறி புரிய வைக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் அறிவுரைக் கூறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார்.
ஊரில் உள்ள சிலரிடம் அவர்களைப் பற்றிக் கேட்டறிந்தார். அவர்கள் அனைவரும் பட்டதாரிகள் என்றும் வேலை தேடி செல்லாமல் இவ்வாறு இருக்கின்றனர் எனவும் அறிந்து கொண்டார். அவர்களை எப்படியாவது நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தார் சந்திரன். ஒரு நாள் வழக்கம்போல் அந்த இளைஞர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் சந்திரன் சென்றார். அவர்கள் சந்திரனைப் பார்த்ததும் எழுந்து நின்றனர். சந்திரன் பேச ஆரம்பித்தார். தம்பி ஊர்முறைக்கு நான் உங்களுக்கு சித்தப்பா முறை வரும்ப்பா. உட்காருங்கப்பா என்றார். அவர்கள் அனைவரும் இணைந்து கூறினர். தெரியும் சித்தப்பா. நீங்க கூட காலேஜில புரபோசரா இருக்கீங்க என்று தயக்கத்துடன் கூறினர். சரிப்பா வாங்க உட்காருங்க பேசுவோம் என்றார் சந்திரன். இதைக் கேட்டதும் கொஞ்சம் தயங்கினர் அந்த இளைஞர்கள். சும்மா உட்காருங்கப்பா என்றார் சந்திரன். அனைவரும் உட்கார்ந்தனர்.
சந்திரன் பேச ஆரம்பித்தார், ஏம்ப்பா பெட்ரோல், டீசல் விலை ஏறிகிட்டே போகுதேப்பா. இதனால அத்தியாவசிய பொருட்களோட விலையும் ஏறிடுது. அது மட்டுமில்லாம பெட்ரோல், டீசலை நாமே அளவுக்கதிகமாக பயன்படுத்திட்டா நம்ம எதிர்கால சந்ததிகள் என்னப் பன்னுவாங்க என்று கேட்டார் சந்திரன். அதற்கு அந்த இளைஞர்கள் அடிக்கடி பெட்ரோல், டீசல் வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். அதிக அளவு மிதிவண்டிகளைப் பயன்படுத்த வேண்டும். ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்கள் ஆளுக்கொரு வாகனத்தின் மூலம் செல்லாமல் ஒரு வாகனத்தில் இருவர் செல்ல பழக வேண்டும். வாகனங்கள் நின்றுக் கொண்டிருக்கும் பொது ஆஃப் செய்து வைக்க வேண்டும். நம் நாட்டில் பெட்ரோல், டீசல் கிடைக்கிறதா? என ஆராய வேண்டும். என ஒவ்வொருவரும் ஒரு கருத்தைக் கூறினர். இளைஞர்களின் அறிவுக்கூர்மையை எண்ணி வியந்தார் சந்திரன். இவ்வளவு புத்திசாலித்தனம் உள்ளவர்கள் எந்த வித வழிகாட்டலும் இல்லாத காரணத்தால் தான் இப்படி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார் சந்திரன்.
சந்திரன் அந்த இளைஞர்களை பயிரிடாமல் வீணாக கிடக்கும் தன்னுடைய நிலத்திற்கு அழைத்து சென்றார். தம்பி என் பெற்றோர்களுக்கு வயதாகி விட்டதால் அவர்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. எனக்கோ வேலை நகரத்தில். அதனால் எனக்கும் விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே இந்த இடம் வீணாக கிடக்கிறது. இதை பிளாட் போட்டு விற்று விடலாமா? இதைப் பத்தி கொஞ்சம் பேசுவோம் என்றார் சந்திரன். இருக்குற எல்லா நிலத்தையும் பிளாட் போட்டு வித்துட்டா. நாளைக்கு சாப்பாட்டுக்கு என்ன பன்றது சித்தப்பா என்றார் ஒரு இளைஞர். எல்லாரும் இப்படி விவசாயம் பன்றதை விட்டுட்டா சாப்பாட்டுக்கு பதிலா சத்து மாத்திரை தான் சாப்பிடனும் என்றார் மற்றொரு இளைஞர். புல்லரித்துப் போன சந்திரன் சொன்னார். சரி தம்பி எனக்கு வேலை வெளியூர்ல நான் எப்படி விவசாயம் பன்றது என்றார். அதற்கு அந்த இளைஞர்கள் யாரிடமாவது கொடுத்து செய்ய சொல்லலாமே என்றனர். இங்கு போர் வசதி வேற இல்ல. வாய்க்கால் தண்ணியை வச்சித்தான் விவசாயம் பண்ணனும். இங்கு விவசாயம் பண்ண யாரும் முன்வர மாட்டேங்கிறாங்கப்பா. நானும் நிறைய பேர்கிட்ட கேட்டுப் பார்த்திட்டேன்ப்பா என்றார் சந்திரன்.
சரிப்பா இந்த நிலத்துல என்ன செய்ய முடியும் என தெரிந்து கொண்டே கேட்டார் சந்திரன். இது வண்டல் மண் சித்தப்பா. வளமான மண். நெல், கரும்பு, வாழை, சோளம், நிலக்கடலை னு எல்லாமே விளையுமே. தண்ணிக்கு மட்டும் தான் கொஞ்சம் சிரமம் என்றனர் இந்த இளைஞர்கள். இதைக் கேட்ட சந்திரனுக்கு உள்ளம் மகிழ்ந்தது. ஆஹா இவ்வளவு அருமையா விவசாயத்தைப் பத்தி சொல்றீங்களே, இன்னும் எதாவது இருந்தால் சொல்லுங்களேன் என்றார் சந்திரன். அரசாங்கம் உழவன் னு ஒரு அப்ளிகேசன் வெளியிட்ருக்கு. அதில அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம், விதை இருப்பு, உரம் இருப்பு, பயிர்க்காப்பீடு, பொருட்களின் கொள் முதல் விபரம், பொருட்களோட சந்தை விலை னு விவசாயத்தைப் பத்தி டூ இசட் அதுல இருக்கும். இதைக் கேட்ட சந்திரன் புல்லரித்துப் போயினார்.
சரிப்பா இவ்வளவு விஷயம் தெரிஞ்சி வச்சி இருக்கீங்களே நீங்க ஏன் விவசாயம் செய்யக் கூடாதுனு கேட்டார் சந்திரன். அதற்கு அந்த இளைஞர்கள் எங்களை யாரும் கேட்கவுமில்லை. நாங்களே வலிய போய் சொன்னாலும் யாரும் காது கொடுத்தும் கேட்பதில்லை என சொன்னார்கள் அந்த இளைஞர்கள். சரிப்பா நான் நிலத்தை பிளாட் போட்டு விற்பதில்லைனும் விவசாயம் செய்யப் போறேனும் முடிவு செஞ்சிட்டேன்ப்பா என்றார் சந்திரன். ரொம்ப சந்தோஷம் சித்தப்பா என்றனர் அந்த இளைஞர்கள். என் நிலத்தை உங்களிடமே ஒப்படைக்கப் போகிறேன். நீங்கள் தான் விவசாயத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும். விளையும் பொருட்களை நீங்களே விற்றுக் கொள்ளுங்கள் என்றார் சந்திரன். அதற்கு அந்த இளைஞர்கள் அமைதியாக நின்றனர். நீங்க முடியலன்னா சொல்லிடுங்கப்பா நான் பிளாட் போட்டு வித்திடுறேன் என்றார் சந்திரன். அய்யோ சித்தப்பா அப்படிலாம் செஞ்சிடாதீங்க. நமக்கும் நாளைய தலைமுறைக்கும் நாம் தான் சாப்பாடு போடனும். நாங்க விவசாயம் பன்றோம் சித்தப்பா என்றனர் அந்த இளைஞர்கள்.
சரிப்பா ஒரு வாரத்தில் இன்ஞின் மூலம் நீர் இறைக்க போர் போட்டுத் தருகிறேன் என்று சொன்னார் சந்திரன். ரொம்ப சந்தோஷம் சித்தப்பா என்றனர் இளைஞர்கள். சந்திரன் சொன்னவாரே இன்ஞின் மூலம் போர் வெல் செய்து கொடுத்தார். அந்த இளைஞர்கள் நெற்சாகுபடி செய்ய முடிவு செய்தனர். அந்த இளைஞர்கள் இப்பவும் பேசிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் அவர்களின் பேச்சின் பொருளடக்கம் மட்டும் மாறியிருந்தது. ஆம் எப்படி பயிரிடலாம், எப்படி உரமிடலாம், எப்படி பாதுகாக்கலாம், எப்படி அறுவடை செய்யலாம், எப்படி விற்கலாம் என அவர்களின் பேச்சு விவசாயத்தைப் பற்றி மட்மே இருந்தது. ஐந்து பேரும் கலந்து பேசி முடிவெடுத்து வேலையில் இறங்கியதால் தெள்ளத்தெளிவான முடிவுகளை எடுத்தனர். அவர்களின் இயல்பான போக்குடன் கூடிய கடின உழைப்பால் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டது. தங்களிடம் இருந்த தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி விளைச்சலும் அமோகமாக கிடைத்தது. அதற்குரிய விலையும் நியாயமாக கிடைத்தது.
அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு சந்திரனிடம் சென்றனர் அந்த இளைஞர்கள். சந்திரன் அவர்களை இன்முகத்துடன் வரவேற்று சிற்றுண்டி வழங்கினார். தங்களுக்கு அமோக விளைச்சல் கிடைத்ததையும் அதற்குரிய பணத்தையும் தங்களிடம் சொல்ல வந்தோம் என்றும், உங்களுக்கு ஒரு பங்கு கொடுக்க வந்தோம் என்றும் கூறினர் அந்த இளைஞர்கள். வீணா கிடந்த நிலத்தை பொன்னாக்கி பசுமையாக வைத்திருப்பதே எனக்கு கிடைத்த பெரிய பரிசு தான்ப்பா. எனக்கு எந்தப் பணமும் வேண்டாம். கிடைக்கும் பணத்தை நீங்களே பிரித்துக்கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பினார் சந்திரன். பசுமையாக வைத்திருப்பதே பெரிய பரிசு என்ற சொன்ன சந்திரனின் வார்த்தை அந்த இளைஞர்களுக்கு உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. தொடர்ந்து அவர்கள் அமர்ந்து மகிழ்ச்சியாக பேச ஆரம்பித்தனர். ஆனால் அவர்களின் பேச்சு விவசாயத்தைப் பத்தியும் விளைவிக்கிறதைப் பத்தியும் மட்டுமே இருந்தது. விவசாயப் பணியும் தொடர்ந்தது. அவர்களது மகிழ்ச்சியும் தொடர்ந்தது. சந்திரனுக்கு மன நிறைவாக இருந்தது.
இளைஞர்கள் வெட்டியாக உட்கார்ந்து அரட்டை அடிக்கிறார்கள் என்று அவர்களை திட்டுவதையும் விட்டுவிட வேண்டும். அறிவுரைக் கூறுவதையும் விட்டு விட வேண்டும். அவர்களை அவர்களின் போக்கில் போய் தான் மாற்ற வேண்டும். அவர்களை தொடர்ந்து அமர்ந்து பேச விடுங்கள். ஆனால் அவர்களின் பேச்சின் பொருளடக்கத்தை மட்டும் பயனுள்ளதாக மாற்றிவிட்டு தொடர்ந்து அவர்களை பேச விட்டுவிடுங்கள். அவர்களின் வாழ்க்கை பிரகாசமாக தானாக மாறுவதை நீங்களே பார்ப்பீர்கள். எல்லாரிடமும் திறமையும், புத்திசாலித்தனமும் நிறைந்து கிடைக்கும். அதைக் கண்டறிந்து தூண்டிவிடும் சந்திரனைப் போன்ற தூண்டுகோல் தான் தற்போதைய சமுதாயத்தின் தேவை.

No comments:

Post a Comment