கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் ஆறு மாதங்களாக இஎம்ஐ செலுத்த முடியாதவர்கள், வரும் செப்டம்பர் மாதம் வட்டி செலுத்தும்போது, ஆறு மாத வட்டியை சேர்த்து செலுத்துவது சிறந்த முடிவாக அமையும் என பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் தொடங்கி மூன்று மாதங்களுக்கு வங்கிகள் கட்டாய வசூல் செய்யக்கூடாது என மத்திய அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. இதனை அடுத்து, பலரும் இஎம்ஐ செலுத்தவில்லை.
மே மாதம் மீண்டும் அந்த காலம் நீடிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் வரை வட்டி வசூலிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் செப்டம்பர் மாதம் பணம் செலுத்தியாக வேண்டிய சூழல் உள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதும், வருவாய் மற்றும் சம்பளம் குறைந்துள்ளதால், பலருக்கும் செப்டம்பர் மாதம் இஎம்ஐ செலுத்துவதில் சிக்கல் இருப்பதாகக் கூறுகின்றனர்.
இஎம்ஐ செலுத்துவதில் தாமதம் கூடாது என்றும் கொரோனா ஊரடங்கு காலத்தில் சந்தித்த இழப்பு குறித்தும் விரிவாகப் பேசுகிறார் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்.
மார்ச் தொடங்கி ஆகஸ்ட் வரை வட்டி செலுத்தாத பலர், செப்டம்பர் மாதம் இஎம்ஐ கட்டவேண்டிய நிலையில் உள்ளனர். வட்டி செலுத்துவது பெரிய சுமையாக உள்ளது. இந்த நேரத்தை எப்படி எதிர்கொள்வது?
மார்ச் மாதம் மத்திய அரசு ஊரடங்கு அறிவித்தது. ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்திற்கு பொது மக்கள் யாருக்கும் இழப்பீடு கொடுக்கப்படவில்லை. சம்பள குறைப்பு, வேலையிழப்பு மற்றும் தொழில் முடக்கத்திற்கு ஆளானவர்களுக்கு அரசிடம் இருந்து கிடைத்த இழப்பீடு பூஜ்யம்.
செப்டம்பர் மாதம் மட்டுமல்ல, வங்கிக்கு ஆறு மாத காலத்தில் செலுத்தியிருக்கவேண்டிய வட்டியை சேர்த்து செலுத்திவிடவேண்டும். மத்திய அரசு இஎம்ஐ விவகாரத்தில் தள்ளுபடி அறிவிக்கவில்லை. சலுகை எதுவும் தரப்படவில்லை. வட்டி செலுத்தும் காலத்தை நீட்டிப்பு செய்தது.
அதாவது செலுத்தாத வட்டியை பின்னர் செலுத்துவது. அதன் அர்த்தம், வங்கிகளிடம் கட்டாய வசூல் கூடாது என்று மட்டுமே சொல்லியிருந்தது, வட்டியை தள்ளுப்படி செய்ய சொல்லவில்லை. ஆறு மாதம் மக்கள் செலுத்தாத வட்டி பணம், வங்கிகளுக்கு நஷ்டமாக மாறிவிட்டது.
இந்த நிலையை சரிசெய்ய, வட்டிக்கு வட்டி கணக்கிட்டு, அதாவது வட்டி செலுத்தும் காலம் முடிவாகும் மாதத்தில் இருந்து மேலும் மூன்று மாதங்கள் வட்டி செலுத்தும் முறையை வங்கிகள் செயல்படுத்தியுள்ளன.
சேமிப்பில் இருந்து எவ்வளவு முடியுமோ அந்த பணத்தை உடனடியாக செலுத்தி இஎம்ஐ மீது மற்றொரு வட்டி செலுத்துவதை தவிர்ப்பது சிறந்த முடிவு. மாத சம்பளம் பெறுபவர்கள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து இஎம்ஐ செலுத்துவது நல்லது. எதிர்காலத்தில், தேவையற்ற வட்டியை நீங்கள் செலுத்துவதிலிருந்து தப்பிக்கலாம்.
ஆறு மாத காலம் கடன் பெற்றவர்கள் வட்டி செலுத்தவில்லை என்ற நிலையில் வங்கிகளின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது அல்லவா? இந்த சுமையை வங்கிகள் எப்படி கையாளுகின்றன?
வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி சுமையின் ஒரு பங்குதான் செலுத்தப்படாத இஎம்ஐ. ஊரடங்கு காலத்தில் இருந்து தற்போதுவரை ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கம் காரணமாக வங்கிகளில் பணபுழக்கம் பெருமளவு குறைந்துவிட்டது.
முடக்கம் காரணமாக தொழில் நிறுவனங்களிடம் இருந்து வங்கிகளுக்கு வந்துசேரவேண்டிய கடன், வட்டி வந்துசேரவில்லை. இதனால், ஏற்கனவே வாராக்கடனில் சிரமப்படும் வங்கிகள் மேலும் கடன் சுமையால் தத்தளிக்கும் என வங்கிநிர்வாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மத்திய அரசாங்கம் பொது மக்களிடம் வருமான வரி வசூலிக்க முடியவில்லை. பொருளாதார முடக்கம் காரணமாக மாநில அரசுகளுக்கு அளிக்கப்படவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை தற்போது தரமுடியாது என நிதி அமைச்சகம் தெரிவித்துவிட்டது.
பணப்பற்றாக்குறை சுமார் மூன்று லட்சம் கோடியை தாண்டிவிட்டது என நிதி அமைச்சகம் சொல்லிவிட்டது. இதனால், மாநில அரசுகள் மத்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்கி கொள்ளுங்கள் என அறிவித்திவிட்டார்கள். இந்த சுமையில் இருந்து வங்கிகள் மீண்டுவருவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என தெரியவில்லை.
பெரிய நிறுவனங்களுக்குக் கொடுத்த கடனை வசூலிக்க முடியவில்லை என்ற நிலையில், வாராக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. செல்போன், வீடு,கார் போன்றவற்றை வாங்க கடன் வாங்கிய மக்கள் ஒரு சில மாதங்கள் செலுத்தமுடியவில்லை என்பது வங்கிகளுக்கு எந்த விதத்தில் சிக்கலாக இருக்கும். ஏன் இதுபோன்ற கடனை தள்ளுபடி செய்யமுடியாது?
திருப்பி செலுத்தப்படாத விவசாய கடன், தொழில் நிறுவனங்களிடம் இருந்து வந்து சேரவேண்டிய வட்டி, முதலீடு மூலம் வந்துசேரவேண்டிய தொகை என எல்லா விதத்திலும் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இஎம்ஐ செலுத்தவேண்டிய தொகையையும் தள்ளுபடி செய்தால், வங்கிகள் மீளமுடியாத கடனில் தவிக்கும். இனிவரும் காலங்களில் பணமோசடி வரலாறு காணாத அளவு அதிகரிக்கும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
வளர்ந்த நாடுகளில் கடனை தள்ளிப்போடுவதற்கான தொகையை வங்கிகள் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துவிட்டார்கள். ஏனெனில் வங்கிகளால் இந்த சூழலைச் சரிக்கட்ட முடியாது. இந்த மாதிரி இந்திய அரசாங்கம் செய்யுமா என்பது கேள்விக்குறிதான்.
ஏனெனில் அரசி, பருப்பை தாண்டி வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அரசாங்கம் எதையும் தரவில்லை. வருமானத்தை இழந்த சிறு வியாபாரிகள், முடக்கத்தால் கடனாளியான மக்களுக்கு எதுவும் கொடுக்காத அரசாங்கம் வங்கிகளுக்கு தருமா என்பதை நான் யோசிக்கவிரும்பவில்லை.
தீர்வு:
இஎம்ஐ யை பார்க்காமல் நெட்பேன்க்கிங் மூலம் கூடுதலாக கடன் அக்கவுன்ட்டிற்கு பணம் செலுத்துவதன் மூலம் வட்டி கொடுமையிலிருந்து தப்பிக்கலாம்.
No comments:
Post a Comment