மத்திய அரசு விரைவில் கொண்டுவர உத்தேசித்திருக்கும் புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கான வரைவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான வரைவுச் சட்டம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. 21 நாட்களுக்குள் இது தொடர்பான ஆலோசனைகள், கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு கூறியிருக்கிறது. மின்துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கவே இந்தத் திருத்தங்களைக் கொண்டுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய திருத்தச் சட்டத்தில் முன்வைக்கப்படும் சில திருத்தங்கள்
முதலாவதாக, மின் கட்டணம் என்பது அதன் உற்பத்திச் செலவுக்கு இணையானதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் விநியோக நிறுவனங்களைச் சிறப்பாக நடத்த முடியும் என்கிறது இந்தச் சட்டம்.
மேலும், மாநிலங்களில் உள்ள மின்சார ஒழுங்கு முறை ஆணையங்கள் அரசு அளிக்கும் மானியங்களைக் கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும். அந்த மானியங்களை அரசு நேரடியாக நுகர்வோருக்குத் தந்துவிடலாம்.
அடுத்ததாக, மின்சார ஒப்பந்தங்களைச் செயல்படுத்தும் ஆணையம் ஒன்றை அமைக்க உத்தேசிக்கிறது இந்தப் புதிய திருத்தச் சட்டம். அதன்படி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மத்திய அமலாக்க ஆணையம் ஒன்று அமைக்கப்படும். இதற்கு ஒரு சிவில் நீதிமன்றத்தின் அதிகாரம் இருக்கும். மின்சாரத்தை வாங்குவது, விற்பது, கடத்துவது (transmission) தொடர்பாக உற்பத்தி நிறுவனம், விநியோக நிறுவனம், டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களுக்கு இடையில் போடப்படும் ஒப்பந்தங்களை இந்த ஆணையம் செயல்படுத்தும்.
இதற்கு அடுத்தபடியாக, மேல் முறையீட்டுத் தீர்ப்பாணையத்தில் தலைவர் தவிர, மேலும் ஏழு உறுப்பினர்களைச் சேர்க்க இந்தத் திருத்தச் சட்டம் வழிவகுக்கிறது. இதன் மூலம் பல அமர்வுகளை நடத்தி, வழக்குகளைச் சீக்கிரம் தீர்க்க முடியும். தான் அளிக்கும் தீர்ப்புகளைச் செயல்படுத்துமளவுக்கு அதிகாரம் வழங்கவும் பரிசீலிக்கப்படுகிறது.
மேலும், மத்திய, மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையங்களுக்கு தலைவரையும் உறுப்பினரையும் தேர்வுசெய்ய தனித்தனியான தேர்வுக் குழுக்களை அமைக்காமல் ஒரே தேர்வுக்குழுவை உருவாக்க இந்த ஆணையம் பரிந்துரைக்கிறது. அதேபோல, மத்திய, மாநில ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர்களுக்கு ஒரே மாதிரியான தகுதிகளையும் பரிந்துரைக்கவும் இந்தச் சட்டம் வழிவகுக்கும்.
மின்சாரச் சட்டத்தின் விதிகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும் ஆணையங்களின் ஆணைகளைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவும் அபராதங்களை உயர்த்துவது இந்தச் சட்டம் முன்மொழிகிறது.
புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க கொள்கை ஆவணம் ஒன்றை உருவாக்க இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.
எந்த அளவுக்கு நீர் மின் திட்டங்களிலிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டுமென்பதை இந்த ஆணையம் வலியுறுத்தும். புதுப்பிக்கத்தக்க அல்லது நீர் மின்திட்டங்களிலிருந்து சொன்ன அளவுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தாவிட்டால், அபராதம் விதிக்க முடியும்.
மின்சார சட்டத் திருத்த மசோதாவை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
No comments:
Post a Comment