Inaiya Sevaigal: பெருஞ்செய்தி (Long Message Service) - சிறுகதை

பெருஞ்செய்தி (Long Message Service) - சிறுகதை




     ஒரு பெரிய நகைக் கடையில் வியாபாரம் முடிந்து கடை மூடிய பின் வரவு செலவு கணக்கு முடிக்கப்பட்டது. இருப்புத்தொகையானது பில்லின் படி சரியாக இருந்தது. ஆனால் வங்கி கணக்கின் படி பத்து லட்சம் குறைவாக இருந்தது இருப்புத் தொகை. கடை முதலாளி அதிர்ந்து போனார். பில்லை பல முறை சரிபார்த்த போதும் இருப்புத் தொகை சரியாக இருந்தது. முதலாளி மிகவும் பதட்டமாக காணப்பட்டார்.
     கடையின் மேலாளர் கவலைப்படாதீங்க முதலாளி கண்டுபிடித்து விடலாம் எனக் கூறிவிட்டு சிசிடிவி கேமாரா புட்டேஜை பார்த்து விடலாம் எனக் கூறினார். அதன்படி பார்த்த போது அனைவரும் பில் வாங்கி உள்ளனர். அனைவரும் பணம் செலுத்தி உள்ளனர். முதலாளி மேலும் பதட்டமானார். உடனே மேலாளர் கவலைப்படாதீங்க முதலாளி கேஷ் பில் தனியாகவும் கார்டு பில் தனியாகவும் பிரித்து பார்த்தால் கண்டுபிடித்து விடலாம் எனக் கூறினார்.
     கேஷ் பில் தனியாக பிரிக்கப்பட்டது. கேஷ் பில்லும் அதற்கான பணத்தையும் சரிபார்த்த போது மிகச் சரியாக இருந்தது. முதலாளி வியர்த்து விறுவிறுத்து காணப்பட்டார். பணம் எப்படி குறைந்திருக்கும் என யாருக்குமே தெரியவில்லை. விற்பனைப் பிரதிநிதிகளையும் மேலாளரையும் நன்றாகத் திட்டித்தீர்த்தார் முதலாளி.
     தற்போது மேலாளர் தயக்கத்துடன் முதலாளி கார்டு பில்லை சரிபார்த்தால் கண்டுபிடித்துவிடலாம் எனக் கூறினார். உடனே முதலாளி கார்டு பில்லுல எப்படியா தப்பு வரும் எனத் திட்டித்தீர்த்தார். சரி செக் பண்ணி பாருங்க என சலிப்புடன் கூறினார் முதலாளி. கார்டு பில்லை சரிபார்த்து போது பில்லும் இருப்புத் தொகையும் சரியாக இருந்தது. முதலாளி கடுப்பாகி போனார். எல்லோரையும் மறுபடியும் திட்டித்தீர்த்தார். ஒரு ரூபாயா? ரெண்டு ரூபாயா? பத்து லட்சம் ரூபாய் டா என ஒருமையில் பேச ஆரம்பித்தார் முதலாளி.
     எல்லோரும் தலை குனிந்து நின்று கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் எல்லோரும் அமைதியாக இருந்தனர். ஒரு பில் மட்டும் கேஷ் பில்லிலும் சேராமல் கார்டு பில்லிலும் சேராமல் தனியாக இருப்பதைப் பார்த்து விலையை பார்த்தார். 10 லட்சம் என இருந்தது. அதிர்ச்சி அடைந்தார் மேலாளர்.
     முதலாளியிடம் பவ்யமாக அந்த பில் விபரத்தை எடுத்துக்கூறினார் மேலாளார். என்ன டைப் பில் யா அது? என கோபத்துடன் கேட்டார் முதலாளி. சார் ஒருத்தர் அக்கவுன்ட்ல பணம் போடுறேன்னு சொல்லி நம்ம கடை அக்கவுன்ட் நம்பரை வாங்கி பணம் அனுப்பினார் சார். நம்ம கடை செல்லுக்கு கிரடிட் மெஸேஜூம் வந்திடிச்சி சார். அதுக்கப்புறம் தான் சார் நகையை டெலிவரி பண்ணுணோம் என கூறினார் மேலளார்.
     மெஸேஜை காட்டுங்க எனக் கூறினார் முதலாளி. மெஸேஜில் வங்கி கணக்கு விபரத்துடன் பத்து லட்சம் கிரெடிட் ஆனதாக தெளிவாக இருந்தது. முதலாளி அப்டியே சோஃபாவில் அமர்ந்து சரிந்தார். மேலளார் கொஞ்சம் பொறுமையாக முதலாளியிடம் சார் நாளைக்கு பேங்க்ல போய் செக் பண்ணி பார்ப்போம் சார் என்றார்.
     அடுத்த நாள் முதலாளியும் மேலாளரும் வங்கிக்கு சென்று கேட்ட போது 10 லட்சம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரவே இல்லை என அடித்துக் கூறினர். உடனே சிசிடிவி கேமரா புட்டேஜ், பில் விபரம், குறுஞ்செய்தி (SMS) விபரம் ஆகியவற்றுடன் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர் முதலாளியும் மேலாளரும்.
     சிசிடிவி கேமாராவில் உள்ள வாங்கியவரின் புகைப்படத்தைக் கொண்டு ஓரிரு நாட்களில் போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். அவரின் வாக்குமூலம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
     ஆமாங்க, அவர் இது போல் பல பொருட்களை வாங்கி உள்ளதாகவும். இதே போல் பலரை ஏமாற்றியதாகவும் உண்மையை ஒப்புக் கொண்டார். அதெல்லாம் சரிதான்ப்பா எப்படிப்பா இப்படி ஏமாத்துனாய் என போலீசார் வியப்புடன் கேட்டனர்.
     அதற்கு அவர் கூறினார். நான் எந்தெந்த கடைகளுக்கு போகப் போகிறேனோ அந்தக் கடைகளின் வங்கி விபரங்களை சேகரித்து, அந்த வங்கியில் யாரையாவது நன்றாக கவனித்து அந்த வங்கி கணக்கின் மொபைல் எண்ணை மட்டும் தெரிந்து வைத்துக் கொள்வேன்.
     எனக்கு பொருள் வாங்க வேண்டிய கடைக்கு சென்று என்னிடம் கார்டு இல்லீங்க பணத்தை உங்க அக்கவுன்ட்ல போட்டுறேன். உங்க வங்கி கணக்கு விபரத்தை சொல்லுங்கனு கேட்பேன். சில மேஸேஜ் அனுப்பும் இணையதளங்களின் வாயிலாக அந்த வங்கி பெயரிலிருந்து அந்த வங்கி கணக்கிற்கு நான் வாங்கிய தொகையை அனுப்பியதாக அவர்களின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி விடுவேன். அவர்களும் குறுஞ்செய்தியைப் பார்த்து விட்டு எனக்கு பொருளைக் கொடுத்துவிடுவார்கள் என்றார்.
     போலீசார் அதிர்ந்து போயினர். அவரிடம் உள்ள பொருட்களை பறிமுதல் செய்து உரிய கடையில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

     தொலைபேசிக்கு வரும் குறுஞ்செய்தி (Short Message Service) ஐ மட்டும் நம்பி விடக்கூடாது. வங்கி கணக்கையும் உடனே சரிபார்க்க வேண்டும். இக்கதை நமக்கு ஒரு பெருஞ்செய்தி (Long Messeage Service).

No comments:

Post a Comment