அரசு பள்ளி மாணவர்களின் நிலை
நான் படிச்சி டாக்டராவேன் என்று நம் அரசுப் பள்ளி மாணவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். சில அரசுப் பள்ளி மாணவர்கள் சிறு வயதில் விபரம் தெரிந்ததிலிருந்தே நான் டாக்டராவேன் என்று சொல்லக் கேட்டிருப்போம். அந்த பிஞ்சுக் குழந்தைகளின் வேட்கையை அவர்களின் கண்களில் பார்த்திருப்போம். ஆனால் அவை எல்லாமே கனவாகவே முடிந்துகொண்டிருந்தன. நன்றாக படித்தும் டாக்டர் ஆக முடியவில்லையே என்று பல அரசுப் பள்ளி மாணவர்கள் வருத்தப்படுவதை நாம் பல முறை பார்த்திருப்போம்.
தொடக்க காலத்தில் மருத்துவக்கல்வியின் நிலை
ஆரம்ப காலத்தில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு இருந்தது. அதாவது மொத்த மருத்துவ இடங்களில் 3 சதவீதம் கிராமப்புத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆகவே அப்போதைய காலத்தில் ஓரளவுக்காவது அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் ஆனார்கள். உதாரணமாக தமிழகத்தின் நாகப்பட்டினம் என்ற மாவட்டத்தில் மணல்மேடு என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் கிராமப்புற பள்ளி மாணவர்கள் பிரிவில் மருத்துவ இடம் ஒதுக்கீடு பெற்று மருத்துவர் ஆனார்கள். இது 1980 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. பிறகு இந்த கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு விலக்கிக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு இப்பள்ளியில் பயின்று நன்மதிப்பெண்கள் பெற்ற ஒருவர் கூட இன்று 2020 வரை மருத்துவர்கள் ஆனதில்லை. இது போல் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் எத்தனை இருக்கும். பாருங்களேன் எவ்வளவு பெரிய பாதிப்பு என்று.
நுழைவுத்தேர்வு முறை
அதன் பிறகு பொது நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. பொதுத்தேர்வுக்கு மட்டுமே தயாராகும் சக்தியுடைய அரசுப் பள்ளி மாணவர்கள் நுழைவுத் தேர்வின் நுட்பம் தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர். எனவே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாய் மாறியது. ஆனால் நாமக்கல் போன்ற உண்டு உறைவிட தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வுடன் நுழைவுத் தேர்வின் நுட்பமும் சொல்லிக்கொடுக்கப்பட்டது. எனவே அங்கு பயிலும் மாணவர்களுக்கு உள்ளங்கனி நெல்லிக்கனியாய் மாறியது மருத்துவ படிப்பு. இது போன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி என்ற நிலை உருவானது. இம்முறையில் மொத்தமுள்ள 3000 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் 5 முதல் 10 மாணவர்கள் மட்டுமே இடம் பிடிக்க முடிந்தது. பாருங்கள் எவ்வளவு பெரிய பாதிப்பு என்று.
ஆண்டு இறுதித்தேர்வு மதிப்பெண் முறை
அதன் பின் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆண்டு இறுதித் தேர்வின் அடிப்படையில் மருத்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. இம்முறையிலும் நாமக்கல் போன்ற உண்டு உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவர்களே அதிகம் இடம்பிடித்தனர். ஏனெனில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு ஆகிய 2 வகுப்பிலும் 12 ஆம் வகுப்பு பாடத்தையே படித்து அப்பள்ளி மாணவர்கள் மிக சுலபமாக அதிக மதிப்பெண்களை பெற்று மிக சுலபமாக மருத்துவ இடங்களை பிடித்து விடுகின்றனர். அவர்களுக்கிடையே வெறும் 10 மாதங்கள் மட்டுமே பாடங்களை படித்து தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டி போட்டு மதிப்பெண்களை பெற முடியாது என்ற விபரம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். இம்முறையில் மொத்தமுள்ள 3000 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் 10 முதல் 20 மாணவர்கள் மட்டுமே இடம் பிடிக்க முடிந்தது. பாருங்கள் எவ்வளவு பெரிய பாதிப்பு என்று.
அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் பெறும் பாதிப்பினை விளக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டக் கடிதம்
நீட் தேர்வு முறை
அதன் பின்னர் நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இம்முறையில் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இம்மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ இடம் நிரப்பப்பட்டது. உதாரணமாக தமிழக அரசிடம் 3000 இடங்கள் உள்ளன. எனவே தமிழக அளவில் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 3000 இடங்கள் பெறும் மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டன. இம்முறையில் மொத்தமுள்ள 3000 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் 1 முதல் 5 மாணவர்கள் மட்டுமே இடம் பிடிக்க முடிந்தது. பாருங்கள் எவ்வளவு பெரிய பாதிப்பு என்று.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு முறை
தற்போது மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட முறைகள் எல்லாத்தையும் விட இம்முறையே மிகச் சிறந்த முறை ஆகும். ஏனெனில் இம்முறையில் மொத்தமுள்ள 3000 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் குறைந்த பட்சம் 400 மாணவர்கள் பயன்பெற போகின்றனர். உதாரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 1980 களில் மருத்துவர் ஆனார்கள். அதன் பின் இன்று 2020 வரை எவரும் மருத்துவர் ஆக முடியவில்லை. தற்போதைய இந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு முறையால் மணல்மேடு அரசு பள்ளியில் பயின்ற ஒரு மாணவிக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப்பிறகு மணல்மேடு அரசு பள்ளியில் பயின்றவர் மருத்துவர் ஆக உள்ளார். இந்த 50 ஆண்டுகளில் உயர் மதிப்பெண் பெற்ற எத்தனை மாணவர்கள் பழைய முறை மருத்துவ படிப்பு சேர்க்கை முறைகளால் மருத்துவம் படிக்க முடியாமல் போயிருக்கும். பாருங்கள் எவ்வளவு பெரிய பாதிப்பு என்று.
இம்முறையில் உள்ள சிறப்பம்சங்கள்.
1. ஒருவர் 6 ஆம் முதல் வகுப்பு 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்றால் மட்டுமே அவர் இடஒதுக்கீடு முறைக்கு தகுதியானவர் ஆவார்.
2. அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயில்பவர்கள் கூட இந்த இடஒதுக்கீடு முறைக்கு தகுதியானவர் ஆக மாட்டார்.
எவ்வாறு இருப்பினும் தற்போதைய மருத்துவ மாணவர் சேர்க்கை முறையால் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெற போவது அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் தலைமுறைகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தர உள்ளது. மருத்துவம் படிக்க முடியாமல் போன பழைய அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆறுதலைத் தருகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றி அவர்களின் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வந்த மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசு பள்ளி மாணவர்களின் துருவ நட்சத்திரமாகத் திகழ்கிறார். அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் சார்பாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்.

No comments:
Post a Comment