கல்லூரி மாணவர்களின் அரியர் தாள்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படும்
முதல்வரின் அறிவிப்பை அடுத்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி, இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப் பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.
இதனால் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் இறுதிப் பருவம் தவிர்த்து மற்ற தேர்வுகளில் தேர்ச்சி வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை, தரமணியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''யுஜிசி வழிகாட்டுதலின்படி, இறுதிப் பருவத் தேர்வுகள் தவிர்த்து பொறியியல் தேர்வெழுத விண்ணப்பித்துக் கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் பொருந்தும்.
அதேநேரம் தேர்வுக்குத் தயாராகி, விண்ணப்பக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மதிப்பெண்கள் அளிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருந்தாலே அவர்கள் தேர்வுக்குத் தயாராகினர் என்ற சாராம்சத்தின் அடிப்படையில் தேர்வெழுதக் காத்திருந்த அனைத்து மாணவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது'' என்றார் அமைச்சர் கே.பி.அன்பழகன்.
No comments:
Post a Comment